Belonging A Journey of Love என்ற தனது சுயசரிதை புத்தகத்தில், 2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பிறகும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததன் காரணம் குறித்தும் அப்போது இருந்த தனது மனநிலை பற்றியும் சோனியா காந்தி விவரித்துள்ளார்.
பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவங்களால், தான் பிரதமராகக் கூடாது என்பதில் ராகுலும், பிரியங்காவும் உறுதியாக இருந்ததாகவும், அதேநேரம், கூட்டணி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பிரதமர் பதவியை ஏற்கும் படி வற்புறுத்தியதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுடனான தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, தனது ஆழ்மனதின் குரலைக் கேட்டு பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாக சோனியா காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்த பின் அதுகுறித்து ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகவும், அதற்கு இது சரியான முடிவு என மகன் ஆதரவளித்ததாகவும் சோனியா கூறியுள்ளார்.
இருப்பினும், பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்த நிலையில், 1990களில் நிதியமைச்சராக இருந்து பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்த மன்மோகன் சிங்கைத் தேர்வு செய்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முதலில் பிரதமர் பொறுப்பை ஏற்க மன்மோகன் சிங்கும் தயங்கியதாகவும், பின்னர் அவரை சம்மதிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
எந்தவொரு உள்கட்சி அமைப்புகளிலும் மன்மோகன் சிங் இல்லாததும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகள் தொய்வின்றித் தொடரும் என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தவும் மன்மோகன் சிங்கின் தேர்வே சரியானதாக இருக்கும் என தான் கருதியதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலக கோப்புகளை தான் கேட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை உள்நோக்கம் கொண்டவை என சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அரசை மன்மோகன் சிங் வழிநடத்தியதாகவும், தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியதாகவும் சுயசரிதையில் விளக்கமளித்துள்ள சோனியா காந்தி, பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை மட்டுமே வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பிரதமரை மாற்றுவது குறித்து பிரணப் முகர்ஜி தன்னிடம் 2010ஆம் ஆண்டில் சூசகமாகக் கூறியபோது, அப்பதவி மீது அவருக்கு விருப்பம் இருந்தது சற்று அதிர்ச்சி அளித்ததாகவும் சுயசரிதையில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக வேண்டும் என்ற பிரணாப் முகர்ஜியின் விருப்பத்தை தான் புரிந்து கொண்டதாகவும், இருப்பினும், பேச்சை வேறுபக்கம் திருப்பி அதைத் தவிர்த்ததாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
