உதவிக்கரம் நீட்டிய மக்களுக்கும் நெருக்கடி!
கென்யா மக்கள் அகதிகளுக்குத் தங்கள் வீடுகளில் இடமளித்து வருகின்றனர். முன்பு ஐந்து அல்லது ஆறு பேருக்குச் சமைத்த குடும்பங்கள், இப்போது 20 முதல் 30 பேருக்கு உணவு தயாரிக்க வேண்டியுள்ளது. துப்பாக்கிக் குண்டுகள் வீடுகளுக்கு அருகில் விழுந்ததால் சில கென்யா குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
முடங்கிய வர்த்தகம்… உயர்ந்த விலைவாசி!
கென்யாவின் மொம்பாசாவையும் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவையும் இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதையில் சரக்கு லாரிகள் இரண்டு வாரங்களாகச் சிக்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் வங்கிகள் மூடப்பட்டதால் எத்தியோப்பிய நாணயப் புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருள்களின் விலையும் சுமார் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

உதவிகள் ஒருபுறம்…
துப்பாக்கிச்சூடு மறுபுறம்!
கென்யா அரசு, ஐ.நா அகதிகள் அமைப்புடன் இணைந்து உணவு, இருப்பிடம், மருத்துவ உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதற்கிடையே, எத்தியோப்பிய செஞ்சிலுவைச் சங்கம் 1,000 குடும்பங்களுக்கு 3 கோடி எத்தியோப்பிய பிர் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது.
எல்லை தாண்டி ஆயுதக் குழுக்கள் வரக்கூடும் என்ற அச்சத்தால் கென்யா கூடுதல் காவல்துறையினரைப் பணியமர்த்தியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி அங்கு சென்ற காவல்துறைத் தலைவர் டக்ளஸ் கன்ஜா, எத்தியோப்பிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையைத் தாண்டி, இன மற்றும் அரசியல் முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெறுவதாக வரும் தகவல்கள், மேலும் பலர் இடம்பெயர வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.”முன்பு இந்த ஒரு நகரத்துக்கு மட்டுமே நாங்கள் உணவு வழங்கி வந்தோம். இப்போது இரண்டு நகரங்களுக்கான தேவைகளையும் நாங்களே கவனிக்க வேண்டியிருக்கிறது’ என்று மொயாலே எல்லை தாண்டிய அமைதிக் குழுவைச் சேர்ந்த அப்தி மாலிம் தெரிவித்துள்ளார்.
நிலப்பரப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்னையில், ஒரு கொடியை ஏற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த வன்முறை, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. எல்லைகள் குறித்த அரசியல் முடிவுகளுக்கு நடுவே, வீடுகள் இழந்து நிற்கும் மக்களின் துயரத்தையும் யாரும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான்… அமைதியும், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பும்தான்!
