Last Updated:
அக்னிவீர் திட்டத்திற்கான சேவை காலத்தை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது.
முப்படைகளில் இளைஞர்களை குறுகிய காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கும் வகையில், அக்னிபத் என்ற ஆட்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னிவீரர்களின் சேவைக்காலம் 4 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதல் பேட்ச் வீரர்களின் பணிக்காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில், பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை மேலும் 2 ஆண்டுகள் தக்கவைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படை தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி, அனைத்து அக்னிவீரர்களும் பாதுகாப்பு படையில் இணைந்து கொள்வதற்கான வழிவகையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாகக் கூறினார்.
2022ம் ஆண்டு பணியில் சேர்ந்த 18,300க்கும் அதிகமான அக்னிவீரர்களின் பணிக்காலம், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போதைய மத்திய அமைச்சரவையின் முடிவு படி, அவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது. தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி, ராணுவத்தில் 2,70,000 அக்னி வீரர்களும், இந்திய விமானப்படையில் 27,000 பேரும், கடற்படையில் 21,000 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்டிக்கப்பட்ட 2 ஆண்டு காலத்தை நிறைவுசெய்த பிறகு, தொடர்ந்து பணியாற்ற விரும்பும் அக்னிவீரர்கள், புறநிலைத் தேர்வு அளவுகோலின் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் முப்படை தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி தெரிவித்தார்.

