Last Updated:
america senate vs India Rajya sabha : நடந்து முடிந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுல்ளது. அதிபரைக் கட்டுப்படுத்தும் செனட் சபையின் அதிகாரங்கள் குறித்து உலகின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது
நடந்து முடிந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுல்ளது. அதிபரைக் கட்டுப்படுத்தும் செனட் சபையின் அதிகாரங்கள் குறித்து உலகின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. அமெரிக்க ஆட்சி முறையின் அமைப்பே இதற்கு காரணமாகும். அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமெரிக்க ஆட்சி முறை இயங்குகிறது. அதிபர் நிர்வாகத்தையும், நாடாளுமன்றம் சட்டமியற்றல் மற்றும் நிதி ஒதுக்கீட்டையும், நீதிமன்றங்கள் அரசமைப்பின் பொருள்கோள் குறித்த சட்டவிளக்கத்தையும் அளிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளன.
இந்தியா அரசியலமைப்பு முறை வேறுவிதமாகச் செயல்படுகிறது. வாக்காளர்கள் மக்களவையைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். ஐந்தாண்டுக்கு ஒரு முறை மக்களவைக்கு தான் தேர்தல் வருகின்றன. மக்களவையில் பெரும்பான்மை பெறும் கட்சியோ அல்லது கூட்டணியோ அரசை அமைக்கிறது. மேலும், பிரதமரும் அமைச்சரவையும் மக்களவைக்குக் கூட்டாகப் பொறுப்பேற்கின்றனர். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், மக்களவையில் இருந்து நிர்வாகம் உருவாக்கப்படுகிறது. மக்களவையின் நம்பிக்கையை இழக்கும் அரசு பதவி விலக வேண்டும்.
ஆனால், அமெரிக்காவில் அதிபரையும் நாடாளுமன்றத்தையும் மக்கள் தனித்தனித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அதிபர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒட்டுமொத்த மக்கள் சபையும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் மூலம், அதிபரின் பதவிக் காலத்தின் நடுவிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதை தான் இடைக்காலத் தேர்தல் என்கின்றனர்.
இந்த இடைக்காலத் தேர்தல் காரணமாகவே, எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினாலும் அதிபர் பதவியில் தொடர முடிகிறது. அமைச்சரவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதில்லை. பதவியில் நீடிக்க அதிபருக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை தேவையில்லை. மேலும், பதவி நீக்கத் தீர்மானம் மூலம் மட்டுமே அதிபரை நீக்க முடியும். எனவே, அரசியலமைப்பு வழங்கும் அதிகாரங்களைக் கொண்டு செனட் சபை வெளியிலிருந்தே நிர்வாகத்தைக் கண்காணிக்கிறது.
அதிபரும் செனட் சபையும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒத்துழைப்பு உறுதி செய்யப்படுவதில்லை. உதாரண்மாக, 2017ம் ஆண்டில், குடியரசுத் கட்சி 52-48 என்ற கணக்கில் செனட் சபையில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. இருப்பினும், அப்போது டொனல்டு ட்ரம்ப் கொண்டு வந்த ‘அஃபோர்டபிள் கேர் ஆக்ட்’ சட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோற்கடிக்கப்பட்டது. குடியரசுத் கட்சி செனட்டர்களான சுசான் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, ஜான் மெக்கெய்ன் ஆகியோர் இறுதி முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தனர். செனட்டர்கள் தங்களின் சொந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், அதிபருக்கு எதிராக வாக்களித்தாலும் அவர்கள் தங்களின் பதவியை இழப்பதில்லை.
நிர்வாத்தை மேற்பார்வையிடுவது செனட் சபையின் முக்கிய அதிகாரமாகும். மேலும், நாடாளுமன்றம் ஒதுக்கும் நிதியை மட்டுமே அரசு செலவிட முடியும். நிதி மசோதாக்கள் நிறைவேற செனட் சபையில் 60 வாக்குகள் தேவை. ஒருவேளை, செனட் சபை நிதி ஒதுக்கவில்லை என்றால் அங்கு அரசு நிருவாகம் நடக்காது. அத்தகைய சூழலில் அரசாங்கத்திற்கு விடுமுறை அளிக்கும் (Government Shutdown) நடைமுறை கூட உண்டு. மேலும், செனட் சபையில் உள்ள கமிட்டிகள் நாட்டின் எந்தவொரு அதிகாரிகளையும் விசாரணை நடத்த முடியும். இறுதியாக, அதிபரை பதவிநீக்கம் செய்யும் உரிமையும் இச்சபைக்கு உண்டு. மக்கள் சபை கொண்டுவரும் தீர்மானத்தை விசாரித்து, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் செனட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிபரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
இந்தியாவில் அரசு நாடாளுமன்றத்தில் இருந்தே அமைக்கப்படுவதால், மாநிலங்களவை வேறுவிதமாகச் செயல்படுகிறது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து, கேள்வி நேரத்தின் மூலம் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். அமைச்சகங்களின் வரவு செலவு மற்றும் மசோதாக்களை ஆராய மாநிலங்களவையில் நிலைக் குழுக்கள் உள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களவையுடன் இணைந்து கூட்டுக்குழுக்களிலும் பணியாற்றுகின்றனர். இக்குழுக்கள் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். அமெரிக்க செனட் குழுக்களைப் போல இவற்றுக்கு நிதி அதிகாரமோ, ஒப்புதல் அளிக்கும் அதிகாரமோ கிடையாது.

