Last Updated:
வெறும் 6 மணி நேரத்திற்குள் 108 பௌத்த ஸ்தூபங்களை முழுமையாகக் கட்டி முடித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
இந்தியா மற்றும் பூடான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு மற்றும் ஆன்மீக பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், பூடான் அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு அரிய மற்றும் உயரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. பூடானில் புதிதாகக் கட்டப்பட்ட 108 பௌத்த ஸ்தூபங்களில் (ஜாங்சுப் சோர்டென் – Jangchub Chorten), 76-வது ஸ்தூபத்தை பிரதமர் மோடியின் பெயருக்கு பூடான் அர்ப்பணித்துள்ளது.
பூடானின் ‘கெலெஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி’ (Gelephu Mindfulness City) பகுதியில் கடந்த 1-ஆம் தேதி இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டது. பௌத்த மதத்தின் புனித நாளான ‘ல்ஹாபாப் துசென்’ (Lhabab Duchen) திருவிழாவை முன்னிட்டு, நள்ளிரவுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பௌத்த துறவிகள் மற்றும் கைவினைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து செயலாற்றி, வெறும் 6 மணி நேரத்திற்குள் 108 பௌத்த ஸ்தூபங்களை முழுமையாகக் கட்டி முடித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
பாரம்பரிய பௌத்த வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியல் வாங்சுக், ராணி கியால்ட்சுவென், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் தோப்கே மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட 76-வது ஸ்தூபத்திற்கான சிறப்புப் பலகையை பூடான் மன்னரும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இணைந்து திறந்து வைத்தனர். அமைச்சர் கிரண் ரிஜிஜு, பூடான் மன்னரைச் சந்தித்து பிரதமர் மோடியின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பூடான் அரசின் இந்தச் சிறப்புமிக்க கௌரவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பூடான் மன்னருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவத்தை 140 கோடி இந்திய மக்களின் சார்பாக மிகுந்த பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த 76-வது ‘ஜாங்சுப் சோர்டென்’ ஸ்தூபம், இந்தியா-பூடான் இடையே உள்ள ஆழமான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பிணைப்பையும், இரு நாடுகளின் உடைக்க முடியாத நட்புறவையும் காலத்திற்கும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

