Last Updated:
உத்தரப்பிரதேசத்தில், ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நொய்டா செக்டர்- 63 பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். தவறுதலாக நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் இறங்கிய அச்சிறுமி, மழையில் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஸ்லீப்பர் பேருந்தை மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.
பேருந்தில் இருந்த டிரைவர் குல்தீப் மற்றும் கண்டக்டர் சந்தீப் ஆகிய இருவரும் சிறுமியை ஏற்றிச் சென்றுள்ளனர். சிறுமிக்கு உதவுவது போல நடித்து பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர், சிறுமியை ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீர் கேட்டில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரையும் திருமார்பூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இருவர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர். 2012 – ல் நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் போல இக்கொடூரச் செயலும்..நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

