தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக உரையாற்றிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தீய சக்தி தி.மு.க-வை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி, கழகத்தை கட்டிக் காத்தார்கள்.
மக்களைதான் வாரிசாகப் பார்த்தார்கள்
அ.தி.மு.க ஆட்சியில்தான் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் சிறுபான்மை மக்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
சகோதரத்துவம் சமத்துவம் ஆகியவற்றை எக்காலமும் பேணிக்காப்பதை நமது உயிர் மூச்சாக கொண்டிருப்பது அ.தி.மு.க. நம் கழகத்தின் இரு தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. ஆனால் அவர்கள் மக்களைத்தான் வாரிசாகப் பார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டோம். பெரும்பான்மை நிரூபிக்கின்ற பொழுது, நம்மோடு இருந்த சிலரே எதிர்தரப்புடன் கைகோத்து சோதனைகளை உருவாக்கினார்கள்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும், அவரோடு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டனர் என்பதை நாம் மறக்கமாட்டோம். என்னுடைய மேஜையின் மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். அதை எல்லாம் நாம் கடந்தோம். அதன்பிறகுதான் முதல்வராக ஆனோம்.
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வீதியிலே திரிந்தவர் தான் இன்றைய முதலமைச்சர். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.

அ.தி.மு.க ஆட்சி அமைந்தப் பிறகு அதை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்றைக்கும் எடப்பாடி அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துவிட்டது என்பதைத் தாண்டி, தி.மு.க-வால் கூட நம்முடைய ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. அப்படி ஒரு பொற்கால ஆட்சி கொடுத்தது அ.தி.மு.க.
அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலரும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். கீழே இருப்பவர் மேலே வருவார்.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கவர்ச்சிகரமாக நிறைவேற்ற முடியாத சுமார் 525 அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றி கொள்ளை புறத்தின் வழியாக ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை.
சிலிண்டர் மானியம், அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமை, அம்மா கிளீனிக் மூடல், அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதை நிறுத்தியது, தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது என அடுக்கிக்கொண்டே போகலாம். பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுத்தது கூட நாம் சட்டமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தால் நடந்தது. வேறு வழியே இல்லாமல் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து கொடுக்கத் தொடங்கினார்கள்.
இன்னும் விதிகளை தளர்த்தி 30 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்திருக்கிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் ஓட்டு மட்டும் அதிமுக கூட்டணிக்குத்தான் போடுவார்கள். இளைஞர்களின் செல்வாக்கையும் ஸ்டாலின் இழந்துவிட்டார். அதனால்தான் அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதெல்லாம் தேர்தலை முன்வைத்து அவர் அறிவித்திருக்கும் திட்டங்கள். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், அவர்களின் உழைப்பை வீணாக்கியிருக்கிறார். இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டிருக்கிறது. மின் கட்டணம் உயர்வு, வீட்டுவரி, குப்பை வரி என வரியால் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது. நெசவாளர்கள் நலிந்துவிட்டார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நெசவாளர்கள் உடல் உறுப்புகளை விற்று உயிர்வாழ்கிறார்கள். திமுக எம்.எல்.ஏ-வின் மருத்துவமனையில் உடல் உறுப்பு முறைகேடாகப் பெற்றது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கு விசாரிக்கப்படும். போக்குவரத்துத் துறையிலும் சிக்கல், தரமற்ற மகளிர் பேருந்து என ஆபத்தான பயணத்தில் இருக்கிறது அந்தத் துறை.
தொழில் வளர்ச்சியும் சரிவை சந்தித்து, முடங்கத் தொடங்கிவிட்டது. மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. போதைப் பொருள் மலிந்துவிட்டது. இப்போதுதான் அமலாக்கத்துறை மெல்ல திமுக ஊழல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 100 நாள் இருக்கிறது. அதற்குள் எத்தனை அமைச்சர்கள் விசாரணைக்குள் சிக்குவார்கள் என்பதை பார்த்துக்கொண்டே இருங்கள்.
பொன்முடி மனைவி மீது, செந்தில் பாலாஜி, கே.என் நேரு, சக்கரபாணி, சிவசங்கர், பெரியகருப்பு என பல அமைச்சர் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. அதையெல்லாம் தோண்டி எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கு இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
SIR என்றாலே ஸ்டாலின் அலறுகிறார். SIR-க்கு அதிமுக முழு ஆதரவை அளிக்கிறது. ஒருபக்கம் எதிர்ப்பு, ஒரு பக்கம் அந்தப் பணியை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அ.தி.மு.க அப்போது முதல் எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை. அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பது இயல்பு.
கலைஞர் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது பா.ஜ.க-வை பாராட்டி முரசொலியில் எழுதினார். அப்பாவுக்கு பா.ஜ.க நல்ல கட்சி, மகனுக்கு கெட்ட கட்சி. அதிமுக சொந்த பலமிக்க கட்சி. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.” என்றார்.
