பொதுவாக விவரமறியாத ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து `புதிது புதிதாகத் திட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றை உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்’ என்று ஆசைகாட்டி, அவர்களிடமிருந்து `பான் கார்டு’, `ஆதார் கார்டு’, `வங்கிக் கணக்குப் புத்தகம்’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நகலெடுத்து வாங்குகின்றனர். பிறகு அவற்றைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என அவர்களது செல்போன்களுக்கு வரும் ஓ.டி.பி எண்களைக் கேட்டு வாங்கிச் சென்று, அவற்றை மோசடித் தொழில் நிறுவனங்கள் நடத்துவோரிடம் விற்றுவிடுகின்றனர்.

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக ஜி.எஸ்.டி எண் பெற்று, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் முறைகேடு செய்கின்றனர். இறுதியில், செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி வரி தொடர்பான நோட்டீஸ், வீட்டுக்கு வரும்போதுதான், தங்கள் பெயரில் இப்படியொரு மோசடி நடந்திருப்பதே அந்த அப்பாவி ஏழைகளுக்குத் தெரியவருகிறது.
மோசடிகள் குறித்தான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும், ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. “கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு போலிகள் ஓட்டம் எடுத்த பிறகே ஆவணங்களின் அடிப்படையில் அப்பாவிகள்மீது அதிகாரத்தை ஏவுகிறது ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு. இறுதியாக குற்றம் செய்யாத அப்பாவிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களும் தேவையில்லாமல் யாரிடமும் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பகிர வேண்டாம்” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.