குறிப்பாக நடுவர் மன்றம் அமைத்தது, அதிலிருந்து நிபுணர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்திருக்கிறோம். எனவே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான DPR அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் காவேரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதிநீர் சம்பந்தமான அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காவிரி நதிநீரை திறந்து விட மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் கடைபிடிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எந்த மாநிலமாவது கடைப்பிடிக்கவில்லை என்றால் அது தொடர்பாக உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம். மேக்கேதாட்டு அணை விவகார தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன” என விரிவான உத்தரவுகளை பிறப்பித்தனர்.
உத்தரவு வாசித்து முடிக்கப்பட்டதற்கு பிறகு தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞரான உமாபதி, “தற்போது காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது. இன்னமும் 50 ஆண்டுகளுக்கு மேலாகும் இந்த விவகாரம் முடிவடைய” எனக் கூறினார்.
அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த வழக்கை பார்க்க நாங்கள் யாரும் இருக்க மாட்டோம். மேலும் மாநிலங்களுக்கிடையிலான இத்தகைய நதி நீர் பிரச்சனைகள் எப்பொழுதுமே தீர்க்கப்படாது” எனவும் சிரித்தபடியே கூறினார்.
