துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த “ட்ராயிங் ரெயில் லைட்டிங்’ என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர்.
கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர்.
குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும். மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
