இப்படியான சகோதர பாசத்தோடுதான் இந்த கழகத்தை அண்ணா தொடங்கி, கலைஞர், இப்போது நான் என வழிநடத்தி கொண்டிருக்கிறேன். இந்த 75 ஆண்டுகாலமும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது இயக்கம் நின்றது கிடையாது. இயங்கிக்கொண்டே இருந்தால் அது இயக்கம். சுறுசுறுப்பாக இருப்பதால்தான் நமது கட்சி இன்று வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. சில மாதங்களாக நான் அறிவாலயத்திலே இருந்துகொண்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தி ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றேன்.
அப்படி, ஆய்வு செய்து கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி, நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய தெம்பாக பணியாற்றக்கூடிய ஊக்கமாக இருக்கிறது. இதுவரை, 80 தொகுதிகளை முடித்துள்ளேன். விரைவிலே 234 தொகுதிகளையும் முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது. முடித்தே தீருவேன். கடந்த 2021 – ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபக்கம் ஆட்சிப்பணி, அரசியல் வாழ்க்கை, புதிய புதிய திட்டப்பணிகள், இன்னொருபக்கம் கட்சி பணி, வாக்காளர் திருத்தப்பணி பிரச்னை, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் என்று இப்படி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
