ஏன் இந்தத் திருத்தம் தேவை?
இந்தியாவில் கடைசியாக 2002-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டு வரை இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின், இந்தத் திருத்தம் நடைபெறவே இல்லை.
தற்போது வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பலரின் பெயர்கள் பெருகிவிட்டன. இதனால், தேர்தலின் போது பல குளறுபடிகள் நடக்கின்றன.
இதை தவிர்க்கவும், சரி செய்யவும், தற்போது சிறப்பு தீவிர திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம், “வாக்காளர் பட்டியலில் தகுதியான எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுப்பட்டுப் போகக்கூடாது… தகுதியற்ற யாருடைய பெயரும் பட்டியலில் இருக்கக்கூடாது. இது தான் இந்தத் திருத்தத்தின் நோக்கம்’ என்று கூறுகிறது.
இங்கே தேர்தல் ஆணையம் தகுதியற்றவர்கள் என்று கூறுவது, வெளிநாட்டினர், இறந்தவர்கள், போலி வாக்காளர், ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆவார்கள்.

இந்தத் திருத்தத்தின் நடைமுறை என்ன?
வாக்குச்சாவடி அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தைக் கொடுப்பார்கள்.
அதில் 2004-ம் ஆண்டு நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, உங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர், அடையாள எண், உறவினர் பெயர் போன்றவைகளும், அப்போது குறிப்பிட்டிருந்த உறவினரின் வாக்காளர் அட்டை தகவலும் கேட்கப்பட்டிருக்கும்.
அதை நீங்கள் தெளிவாக நிரப்பி, வாக்குச்சாவடி அலுவலரிடம் தர வேண்டும்.
