விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பை நிகழ்த்துவதற்கான இடமும் காவல்துறையின் அனுமதியும் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக தவெக தரப்பில் கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். அக்டோபர் 18 ஆம் தேதி உயிரிழந்தோரின் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் தவெக தரப்பில் ஏற்றப்பட்டது. அந்தக் குடும்பங்களுக்கு விஜய் எழுதிய கடிதத்திலும், ‘அனுமதி கிடைத்தவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.’ என்றே கூறியிருந்தார். ஆனால் திடீரென இந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை தவெக தரப்பு தொடங்கியது.
‘கரூரில் அந்த மக்களை சந்திப்பதற்காக இடத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆளும் தரப்பு இட உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. காவல்துறையும் அனுமதி கொடுக்க பல கெடுபிடிகளை விதிக்கிறது. இதனால் மீண்டும் அந்த மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் அவர்களை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறுகிறோம். மேலும், துக்கம் நிகழ்ந்த 30 வது நாளுக்குள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்படியொரு ஏற்பாடு.’ என தவெக தரப்பு காரணம் கூறியது.
