பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணையாமல் இருந்தன. இதை அடுத்து மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் கேரள மாநிலம் திடீரென பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து உள்ளது. அதற்காக கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.
இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. மேலும், ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் சி.பி.எம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு கையெழுத்திட்டது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில்,
“வெளியில் ஒன்று பேசுவதும், உள்ளே மற்றொன்று செய்வது என இரட்டை நிலைபாட்டில் செயல்படுகிறது சி.பி.எம் அரசு. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதில்லை என உறுதியாக இருந்தது இந்த அரசு. ஆனால் திடீரென அந்த திட்டத்தில் முழுமையாக இணைந்துள்ளது.
அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மத்திய அரசு திட்டத்தில் இருந்து நிதி பெறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

கூட்டணிக்குள் எதிர்ப்பு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு கையெழுத்திட்ட விவகாரம் அக்கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில்,
“யாரிடமும் விவாதிக்காமலும், ஆலோசனை கேட்காமலும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து எல்.டி.எஃப் கூட்டணியிலும் விவாதிக்கவில்லை.
இதுபற்றி தெரிந்துகொள்ளும் உரிமை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. ஒப்பந்தம் குறித்தும், அதன் உள்ளடக்கம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகளை இருட்டில்விட்டுவிட்டு செல்வதுதான் எல்.டி.எஃப் கூட்டணியின் செயல்பாடா? தேசிய கல்வித்திட்டத்தின் வெளிப்பாடுதான் பி.எம்.ஸ்ரீ திட்டம்.
இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கு கவலை உண்டு. இடதுசாரிகளின் மாண்பை மறக்கும் இந்தப் பழக்கம் சரி செய்யப்பட வேண்டும். இதுகுறித்து எல்.டி.எஃப் ஒருங்கிணைப்பாளருக்கு சி.பி.ஐ சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார்.
