மத்திய மீன் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் சிறப்பு யாக பூஜை நடத்திய பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன், “‘ராமேஸ்வரத்திற்கு புதிதாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாம்பன் கடலின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் மீனவர்களுக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாசி வளர்ப்பு, இறால் மீன் குஞ்சுகள் வளர்ப்பு, இலங்கை கடற்படையினரின் இடையூறுகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுபட மாற்று தொழிலாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்குதல் என பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன போதும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது பல்வேறு காரணங்களால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுகின்றனர். தற்போது கூட சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்டு தருமாறு என்னிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

