ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.
இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தங்களின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அவ்வாறு எந்தவொரு முதலீடு செய்யவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என்றும், தி.மு.க அரசு மோசடி செய்வதாகவும் பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தி.மு.க அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு ஆகும்.
தி.மு.க அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கிவிட்டன.
