இவர், கடந்த 10ஆம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் தனது ஆண் நண்பருடன் உணவு அருந்துவதற்காக கல்லூரியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்படி செல்லும்போது, கல்லூரியில் இருந்து சற்று தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரது ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, அந்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயேவிட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். பின்னர் ஒருவழியாக கல்லூரி திரும்பிய மாணவி இது குறித்து தனது தோழிகளிடம் தெரிவிக்க, அவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் தந்தை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இரவு 10 மணிக்கு, என் மகளின் தோழி எங்களை அழைத்து, உங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறினார். சம்பவம் நடந்த அன்று, என் மகளின் வகுப்புத் தோழர்களில் ஒருவர் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறி அவளை வெளியே அழைத்துச் சென்றார். ஆனால் இரண்டு அல்லது மூன்று ஆண்கள் வந்தபோது, அவன் அவளைக் கைவிட்டு ஓடிவிட்டான். அவர்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் நடந்துள்ளது” என வேதனையை தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மாணவியுடன் வெளியே சென்ற அந்த ஆண் நண்பரையும் காவல்துறையினர் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்கள் மட்டும் இன்றி எதிர்க்கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் துர்காபூரில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இது தொடர்பான வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் மாணவர், கல்லூரி செக்யூரிட்டி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு வெளியே இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, “இது தனியார் கல்லூரி. ஒடிசா கடற்கரையில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி அதிகாலை 12.30 மணிக்கு எப்படி வெளியே வந்தார்? இந்தச் சம்பவம் வனப்பகுதியில் நடந்திருப்பதாக தற்போதைக்கு தெரியவருகிறது.
என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் மீது.
பெண்கள் இரவில் வெளியே (கல்லூரிக்கு) செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வனப்பகுதி உள்ளது. போலீசார் அனைவரையும் சோதனை செய்கிறார்கள். யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.
#WATCH | Kolkata, WB: On the alleged gangrape of an MBBS student in Durgapur, CM Mamata Banerjee says, “… The girls should not be allowed to go outside (college) at night. They have to protect themselves also. There is a forest area. Police are searching all the people. Nobody… https://t.co/9cck7wwxcn pic.twitter.com/OnuFiFSIAz
— ANI (@ANI) October 12, 2025
இந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவம் மற்ற மாநிலங்களில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான்.
மணிப்பூர், உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கெல்லாம் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நமது மாநிலத்தில், குற்றம் நடந்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையே பெற்றுத்தந்துள்ளோம்” என பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மாணவிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவரும் சூழலில், மற்ற மாநிலங்கள் குறித்தும், கல்லூரியைவிட்டு இரவு நேரங்களில் மாணவிகள் வெளியேவரக்கூடாது என்றும் மாநில முதலமைச்சரான மம்தா பேனர்ஜி பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
October 12, 2025 4:10 PM IST
“இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது” – மாணவி கூட்டு பலாத்காரம் குறித்து மம்தா சர்ச்சை கருத்து
