Last Updated:
இருமல் மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் முறையிடப்பட்டுள்ளது.
கோல்ட்ரிப் (coldrif) உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தான கோல்ட்ரிப்பை உட்கொண்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தது. மருத்துவப் பரிசோதனையில் குழந்தைகளின் சிறுநீரகங்களில் டை எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அந்தக் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப், நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் உள்ளிட்ட இருமல் மருந்துகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இருமல் மருந்து தயாரிப்புக்காக வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என்றும் இருமல் மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.
இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான ரசாயன கலப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
October 07, 2025 2:51 PM IST

