Last Updated:
குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களும், ஊழியர்களும் கிட்டத்தட்ட 10 நாட்களாக அழுகிய உடல் கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள மகரிஷி தியோராஹா பாபா மருத்துவக் கல்லூரியின் (Maharshi Devraha Baba Medical College) ஐந்தாவது மாடியில் உள்ள சிமென்ட் பூசப்பட்ட தண்ணீர் தொட்டியில் ஒரு இளைஞரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களும், ஊழியர்களும் கிட்டத்தட்ட 10 நாட்களாக அழுகிய உடல் கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது அந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், ஐந்தாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய ஊழியர்கள் பரிசோதித்தபோது, அடையாளம் தெரியாத இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலம் அகற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் மரணித்திருக்கலாம். இந்த காலகட்டத்தில் OPD மற்றும் வார்டு கட்டிடங்கள் இரண்டிற்கும் இளைஞரின் உடல் கிடந்த தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தியோரியா மாவட்ட நீதிபதி திவ்யா மிட்டல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஷ் குமார் பர்ன்வால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மறு அறிவிப்பு வரும்வரை Etah மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைத் தலைவர் டாக்டர் ரஜினி, தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆய்வின் போது, பூட்டியே இருக்க வேண்டிய தண்ணீர் தொட்டி மூடி திறந்தே இருப்பதை திவ்யா மிட்டல் கண்டறிந்தார். இந்த தவறு குறித்து ராஜேஷ் குமார் பர்ன்வாலிடம் அவர் கேள்வி கேட்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
இதனிடையே அழுகிய சடலத்தால் மாசுபட்ட தொட்டியை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டேங்கர்கள் மூலம் மாற்று நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தலைமை மேம்பாட்டு அதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உடல் எப்படி தொட்டியில் இருந்தது? இது கொலையா? அல்லது இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு அலட்சியம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
October 09, 2025 3:43 PM IST
டேங்க்கில் சடலம் இருப்பது தெரியாமல் 10 நாட்களாக தண்ணீரை பயன்படுத்திய அவலம்…! அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்…

