Last Updated:
தாமரை இதழ்களை போன்ற 12 தூண்களும், 17 பிரமாண்ட நெடுவரிசை தூண்களும் விமான நிலையத்தின் கூரை விதானங்களை தாங்கியபடி நிற்கின்றன.
மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பையில் 19,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
தெற்கு மும்பையிலிருந்து சுமார் 37 கிலோ மீட்டர் தொலைவில், உல்வே என்ற பகுதியில், ஆயிரத்து 160 ஹெக்டேர் பரபரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது நவிமும்பை சர்வதேச விமான நிலையம்…. மும்பையின் தற்போதைய விமான நிலையத்தின் நெரிசலை குறைக்க அமைக்கப்பட்டது நவி மும்பை விமான நிலையம். கட்டுமான பணிகள் முடிந்து பிரதமர் மோடி, விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார்.. முன்னதாக நடந்துச் சென்று விமான நிலையத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில், உலக அளவில் விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் மையமாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என கூறினார்.. 2014- ஆம் ஆண்டு தான் பிரதமராக பதவியேற்ற போது 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும், இது தற்போது 160- ஆக உயர்ந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மராட்டிய அரசு முன்மொழிந்தபடி, இந்த விமான நிலையத்திற்கு ‘லோகனேதா டி.பி. பாட்டீல் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்’ என்று பெயரிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்த முடியும். டெர்மினல்- ஒன்றில் ஆண்டுதோறும் 2 கோடி பயணிகளையும், 8 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளலாம். 3,700 மீட்டர் நீள ஓடுபாதையை கொண்டுள்ளதால், ஏர்பஸ் A380 போன்ற பெரிய விமானங்களையும் நிறுத்த முடியும். எதிர்கால விரிவாக்கத் திட்டங்களின்போது மூன்று கூடுதல் முனையங்களும், இரண்டாவது ஓடுபாதையும் அமைய உள்ளது. இதனால், 2036ம் ஆண்டுக்குள் 9 கோடி பயணிகளைக் கையாளும் திறனை பெறும்.
தாமரை இதழ்களை போன்ற 12 தூண்களும், 17 பிரமாண்ட நெடுவரிசை தூண்களும் விமான நிலையத்தின் கூரை விதானங்களை தாங்கியபடி நிற்கின்றன. நில அதிர்வுகள், புயல், அதிக எடை ஆகியவற்றை தாங்கும் வகையில் விமான நிலையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள், அழுகக்கூடிய பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் போன்றவற்றுக்கு பிரத்யேக பிரிவுகள் உட்பட முழுமையாக தானியங்கி மற்றும் AI வசதிகளுடன் கூடிய சரக்கு முனையம் உள்ளது. தடையற்ற பயணத்திற்காக விமான நிலையம் முழுவதும் ‘டிஜி யாத்ரா’ (Digi Yatra) செயல்படுத்தப்பட்டுள்ளது.
முக அங்கீகாரம் மூலம் செக்-இன், ஸ்மார்ட் பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்திற்குள் மின்சார வாகனப் பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும். உலக புகழ்பெற்ற ஜஹா ஹதீத் கட்டடக் கலைஞர்கள் 19 ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை கட்டியுள்ளனர்.
October 09, 2025 7:17 AM IST

