Last Updated:
சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அமர்ந்துவிட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் உறவினருடன் பிரசவத்திற்காக காலை நேரத்தில் சென்றுள்ளார். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை யாருமே அங்கு கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு படுக்கை வசதி கூட கொடுக்கப்படவில்லை. இரவு வரை அலைக்கழித்த மருத்துவ ஊழியர்களால் அந்தப் பெண் பெரும் துயரத்துக்கு ஆளானார். இரவு 9.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அமர்ந்துவிட்டார். வலியால் துடித்த பெண்ணுக்கு கடைசி வரை யாரும் உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 1.30 மணியளவில் அந்தப் பெண் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணிப் பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாகப் பேசி கேலி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு இரவு 1.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவிலேயே பிரசவம் நடைபெற்றதாக தலைமை மருத்துவர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
October 04, 2025 12:46 PM IST
தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த பெண்.. “சுகமாக இருக்கிறதா?” என்று கேலி செய்த நர்சுகள்.. உத்தரகாண்டில் அதிர்ச்சி!

