Last Updated:
இளம்பெண்ணிற்கும், செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆசை இருந்ததால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
மத்திய பிரதேசத்தில் செல்லப்பிராணிகள் மீது கொண்ட நேசத்தால், “MADE FOR EACH OTHER” என்று கூறிக் கொண்டு, திருமணம் செய்த காதல் ஜோடி, அதே செல்லப்பிராணிகளால் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் நாய், மீன், முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்ந்து வந்தார். அதே சமயம், போபாலுக்கு பணி நிமித்தமாக சென்ற உத்தரப்பிரேதசத்தை சேர்ந்த இளம்பெண்ணிற்கும், செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆசை இருந்ததால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், தனது வளர்ப்பு பிராணியான பூனையுடன் இளம்பெண், கணவர் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், தனது பூனையை கணவரின் நாய் கடிக்க வருவதாக மனைவியும், தான் வளர்க்கும் மீனை, பூனை சாப்பிட வருவதாக கணவரும் மாறி மாறி குற்றம்சாட்டி சண்டையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து சண்டை முற்றிய நிலையில், இருவரும் விவாகரத்து கோரி போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். செல்லப் பிராணிகள் மீது கொண்ட நேசம் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்த காதல் ஜோடிகள், 8 மாதங்களுக்குள், அதே காரணத்தால், விவாகரத்து கோரி இருப்பது, போபால் நீதிமன்றத்தில் புதுவித வழக்காக பார்க்கப்படுகிறது.
September 25, 2025 12:25 PM IST

