Last Updated:
பாராசிட்டமால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்திய மற்றும் உலக மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து இது ஆதாரமற்றது எனவும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கர்ப்பிணிப் பெண்கள் பேராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது எனத் தெரிவித்துள்ளார். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்திய மற்றும் உலக மருத்துவர்கள் பலரும் இது ஆதாரம் அற்ற வாதம் எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நான் மருத்துவர் அல்ல. ஆனால், நான் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்கள் டைலெனால் (பாராசிட்டமால் அல்லது டோலோ) மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார். மேலும், அது குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களை அணுகிய பிறகு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பாராசிட்டமால் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் கூறிய அவர், அதீத காய்ச்சல் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தக் கருத்து வெளியாக உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இது தொடர்பாக நடந்த ஆய்வுகளில் இதுவரை பாராசிட்டமால் மருந்துக்கும் குழந்தைகளின் ஆட்டிசம் பிரச்சனைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அதிகப்படியான ஆய்வுகள் கூறவில்லை. இந்தச் சூழலில் டிரம்பின் இந்தக் கருத்து உலக அளவில் பெரும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ வல்லுநர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மருத்துவர்களின் ஆலோசனையை நம்ப வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
நியூஸ்18 குழுமத்திடம் இது தொடர்பாக பேசிய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான எய்ம்ஸ் மருத்துவர் வைஷாலி சர்மா, கர்ப்ப காலத்தில் எந்த மருந்தையும் நீண்ட நேரம் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். ஆனால் பாராசிட்டமால் மற்றும் ஆட்டிசத்திற்கு நேரடி தொடர்பு இல்லை என்று உறுதியாகக் கூறினார்.
30 வருட அனுபவமுள்ள மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சுந்தர், “பாராசிட்டமால் மற்றும் ஆட்டிசம் ஆகியவற்றுக்கு நேரடி அல்லது காரண தொடர்பு இல்லை. அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு மக்கள் பீதி அடையக்கூடாது. அதேசமயம், கர்ப்பிணிகள் தாங்களாக இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
September 23, 2025 7:56 PM IST
கர்ப்பிணிகள் பேராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு? – புயலைக் கிளப்பிய டிரம்ப்! மறுக்கும் மருத்துவர்கள்

