டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை, அதன் சிவப்பு நிறத்தை இழந்து கருப்பாக மாறி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது டெல்லியின் மிக மோசமான காற்று மாசுபாடு.
இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று செங்கோட்டை. முகலாய, பாரசீக மற்றும் இந்து கட்டடக்கலை பாணிகளின் கலவை இது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இங்கு பிரதமர் தேசிய கொடி ஏற்றிவைப்பார். சிவப்பு மணலால் கட்டப்பட்டதால், இதற்கு லால் கிலா எனப் பெயரிடப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தச் சிறப்புமிக்க செங்கோட்டை தற்போது கருப்பாக மாறி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஐடி ரூர்க்கி, ஐஐடி கான்பூர், இத்தாலியின் வெனிஸ் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவை இணைந்து செங்கோட்டை குறித்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில், 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான டெல்லியின் காற்றுத் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு தேசிய வரம்பைவிட இரண்டரை மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
செங்கோட்டையின் சுவர் மற்றும் வளாகத்திற்குள் உள்ள சிறிய அரண்மனையான ஜாபர் மஹால் மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். மாதிரிகளில் ஜிப்சம், காரீயம், தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பதை உறுதி செய்தனர். டெல்லியின் காற்றில் உள்ள ஜிப்சம் மற்றும் பிற நச்சுப் பொருட்கள், வாகனப் புகை, கட்டுமானப் பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு ஆகியவை செங்கோட்டையின் மேற்பரப்பில் படிந்துள்ளன.
இந்த உலோகங்கள் செங்கோட்டை கட்டப்பட்ட சிவப்பு மணற்கல்லுடன் வேதியியல் வினை புரிந்து, அதன் மீது கருப்பு நிறப் பூச்சை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். PM2.5 மற்றும் PM10 துகள்கள், செங்கோட்டையைச் சுற்றியுள்ள காற்றை மாசுப்படுத்தியதாகவும், இவை நீண்ட காலமாகப் படிந்து நிற மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளைக் கட்டுப்படுத்துவது, தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மற்றும் வாகனப் புகையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். கோட்டையைச் சுற்றி அதிகப்படியான மரங்களை நட்டு, பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் மூலம், காற்று மாசுபாட்டை ஓரளவு குறைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கோட்டையின் மேற்பரப்பில் உள்ள கருப்புப் படலத்தை அகற்றுவதற்காக, தொல்லியல்துறை விஞ்ஞானிகள் ரசாயன அடிப்படையிலான சுத்தப்படுத்தும் முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுத்தப்படுத்தப்பட்ட சுவர்களுக்கு நீண்ட காலப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சிலிக்கான் அடிப்படையிலான கவசப் பூச்சுகளைப் பூசவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டில், செங்கோட்டையின் தனித்துவமான கட்டடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரித்து, யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 18, 2025 7:07 PM IST
