Last Updated:
பாட்னா நீதிமன்றம், பிரதமர் மோடி மற்றும் ஹீராபென் மோடி உருவம் கொண்ட ஏஐ வீடியோவை அனைத்து தளங்களிலிருந்தும் நீக்க காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டது.
பிரதமர் மற்றும் அவரது தாயின் உருவத்தை வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை நீக்க காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகார் காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதளப் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஏஐ வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோவில், பிரதமர் மோடியின் கனவில் அவரது தாய் ஹீராபென் மோடி வருவது போன்றும், அதில் மோடியின் அரசியல் கொள்கைகளை அவர் விமர்சிப்பது போலவும் உருவாக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஃபேஸ்புக், எக்ஸ், கூகுள் என அனைத்து தளத்தில் இருந்தும் அந்த வீடியோவை நீக்க காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த வீடியோ தொடர்ந்து பகிரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகார் காங்கிரஸ் தலைவர், சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக பிகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி நடத்திய வாக்கு அதிகாரம் நடைபயணத்தின் போது, சிலர் பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், அவரது தாயைப் பற்றியும் அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, பிகார் மாநிலத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்தியது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி ஏ.ஐ.யில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
September 17, 2025 3:51 PM IST
பிரதமர் தாயை சித்தரித்து வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்! பிகார் உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

