பிரம்மாண்டமான அளவில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், நிதி இழப்புகளை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளங்கள், மற்றும் குறைக்கடத்திகள் (Semi Conductors), செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னோடித் தொழில்நுட்பங்களில் உறுதியான கவனம் செலுத்துவது ஆகியவை அவரது ஆதரவாளர்களால் “மோடியின் உத்தரவாதம்” என அழைக்கப்படுகின்றன.
இது, அரசுத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் என்றும், இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், நலத்திட்டங்கள் இலவச உதவிகளாக அல்லாமல் கண்ணியத்துடன் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கிறது.
இந்த ஆளுமை மாதிரி கிராமப்புறங்களின் சமையலறைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் பொது சுகாதாரத்தை மறுவரையறை செய்த தூய்மை இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் என எல்லா இடங்களிலும் தனது ஆழமான முத்திரையைப் பதித்துள்ளது. அதே சமயம், இது சிப் உற்பத்தி அலகுகள், செயற்கை நுண்ணறிவு மையங்கள் மற்றும் குவாண்டம் ஆய்வகங்கள் என விரிவடைந்து, 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற மோடியின் பெரிய கனவுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
2016-இல் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) தொடங்கப்பட்டபோது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நேரடியாக உதவும் ஒரு திட்டமாக அது கருதப்பட்டது. கோடிக்கணக்கான வீடுகள் சமையலுக்கு விறகு, சாணம் மற்றும் நிலக்கரி போன்றவற்றைச் சார்ந்திருந்த நிலையில், உஜ்வாலா திட்டம் ஏழை குடும்பப் பெண்களுக்கு வைப்புத் தொகை இல்லாத எல்பிஜி இணைப்புகளை வழங்கியது.
திட்டத்தின் வெற்றிக்கு, அதை பிரம்மாண்டமான அளவில் செயல்படுத்தியது முக்கிய காரணமாகும். மார்ச் 2025-க்குள், 10.3 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டன. உஜ்வாலா 2.0-வின் இரண்டாம் கட்டத்தில், புலம்பெயர்ந்த குடும்பங்களுக்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதன் மூலம், அவர்கள் தங்கும் இடச் சான்றுகள் இல்லாமலும் மானியங்களைப் பெற முடிந்தது
ஜன் தன் யோஜனா: 2014-இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, நிதி உள்ளடக்குதலின் அடித்தளமாக அமைந்தது. பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கி கணக்குதாரர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தக் கணக்குகளில் பாதிக்கும் மேல் பெண்களுடையவை. இந்தத் திட்டத்தின் மூலம், வங்கிக் கணக்குகள் மூலமான நேரடிப் பலன் பரிமாற்றங்கள் (DBT) மூலம் ரூ. 3.4 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை இழப்பு தவிர்க்கப்பட்டது
2014-இல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. 5 ஆண்டுகளில், 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. இது ஒரு கட்டுமான இயக்கமாக மட்டுமல்லாமல், ஒரு பெரிய மக்கள் இயக்கமாகவும் மாறியது.
2015-இல் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், மோடியின் ஆட்சியில் நடந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும். 2014-இல் 250 மில்லியனுக்கும் குறைவாக இருந்த இணைய இணைப்புகள் 2025-க்குள் 970 மில்லியனைத் தாண்டியுள்ளன.
ஆதார்: 140 கோடிக்கும் அதிகமான அடையாள அட்டைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாகும்.
யுபிஐ (UPI): 2016-இல் தொடங்கப்பட்ட யுபிஐ, இப்போது மாதத்திற்கு 19 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செய்கிறது. இது, உலகிலேயே நிகழ்நேர பரிவர்த்தனைகளில் ஏறக்குறைய பாதியை உள்ளடக்கியது.
கோவின் (CoWIN): உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை நிர்வகித்து, 2.2 பில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கக்கூடிய சான்றிதழ்களை வழங்கியது.
இந்தியா, குறைக்கடத்தி துறையில் பல தசாப்தங்களாக இழந்த வாய்ப்புகளை, இந்திய குறைக்கடத்தி இயக்கம் (ISM) மூலம் மாற்றியமைக்க முயல்கிறது. ரூ. 76,000 கோடி உற்பத்தி-இணைப்பு ஊக்கத் திட்டத்தின் ஆதரவுடன், ISM ஏற்கனவே ரூ. 65,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இஸ்ரோ தனது முதல் உள்நாட்டு 32-பிட் சிப்பான ‘விக்ரம்’ மைக்ரோபிராசசரை விண்வெளி பயன்பாடுகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைக்கடத்திகளைப் போலவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களிலும் மோடி அரசு கவனம் செலுத்துகிறது. இந்தியாஏஐ இயக்கம் குறைந்த செலவில் ஜி.பி.யூ-களை வழங்கி வருகிறது, மேலும் தேசிய குவாண்டம் இயக்கம் அடுத்த எட்டு ஆண்டுகளில் 50–1000 குபிட் திறன் கொண்ட கணினிகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆட்சிமுறையின் பரந்த தடம்
இந்த பெரிய திட்டங்களுக்கு அப்பால், மோடியின் ஆளுமை மாதிரி உள்கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது:
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம்.
பிஎம் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டம்.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம்.
இவை அனைத்தும், “கடைக்கோடி மக்களையும், பெரிய அளவிலும், வேகமாகவும் சென்றடைவதற்கான” கொள்கைகளின் சான்றுகளாக வழங்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது வயதில் அடியெடுத்து வைக்கும்போது, அவரது ஆளுமை பிராண்ட் ஒரு சீர்திருத்தத்தால் அல்ல, மாறாக பிரம்மாண்டமான அளவிற்கான நலத்திட்ட வடிவமைப்பு, வேகமான விநியோகத்திற்கான வடிவமைப்பு மற்றும் எதிர்கால இறையாண்மைக்கான புத்தாக்கம் என்பதுபோன்ற ஒழுங்கு முறையால் வரையறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு திட்டத்தின் பின்னணியிலும் உள்ள வாக்குறுதி ஒன்றே. அது அறிவிக்கப்பட்டவை அனைத்தும் செயல்படுத்தப்படும், மற்றும் அந்தச் செயல்படுத்தல் அனைவருக்கும் தெரியும் விதமாக இருக்கும் என்பதுதான் அது. இந்தச் செயல்பாட்டு மாதிரி தொடர்ந்தால், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை இந்தியா அடைவது சாத்தியமாகும்.
September 17, 2025 3:21 PM IST
