Last Updated:
தெரு நாய் விவகாரத்தில் உத்தரப் பிரதேசம் அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தெருநாய்களின் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தெருநாய் கடித்து சில மனித உயிரிழப்புகளும் நடந்துவருகின்றன. முன்னதாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் இருக்கும் தெருநாய்களை எட்டு வாரத்திற்கு முழுதாக பிடித்து காப்பகத்தில் அடைத்து அதனை பராமரிக்க வேண்டும் என டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பரவலாக வரவேற்கப்பட்ட நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அந்த நாய்களை பிடித்த பகுதிகளிலேயே விட்டுவிட வேண்டும் என்றும், ராபிஸ் நோயை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ள நாய்களை காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டது. மேலும், தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முற்றிலுமாக தடை செய்து உத்தரவிட்டது.
இதேபோல், சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் அரசு தெருநாய்களை ஆயுள் முழுவதும் காப்பகத்திலேயே வைக்கும்படியான ஒரு நெறிமுறையை வழங்கியுள்ளது.
தெரு நாய் விவகாரத்தில் நெறிமுறைகளை வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேச அரசு, தூண்டுதல் இல்லாமல் மனிதர்களைக் கடிக்கும் நாயை 10 நாட்கள் காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும். அதே நாய் மீண்டும் யாரையாவது கடித்தால் ஆயுள் முழுவதும் காப்பகத்திலேயே அடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நெறிமுறையில், காப்பகத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்படும் என்றும், நாய் தூண்டுதலால் கடித்ததா இல்லையா என்பதை கால்நடை மருத்துவர் அடங்கிய உள்ளூர் அளவிலான குழு விசாரித்து முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
September 16, 2025 10:13 PM IST

