Last Updated:
பிகாரில் நலத்திட்டங்களைத் துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தனது குடும்ப நலனை மட்டுமே சிந்திக்கும் எனக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், அரசியல் கட்சிகளும் தீவிரமாக தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிகார் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். அதன்படி, பிகார் புர்னியா விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். மேலும் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தும், சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தாமரை விதையான மக்கானா வாரியத்தையும் தொடங்கிவைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்ற அன்பளிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தங்களது குடும்ப நலன் குறித்தே சிந்திப்பதாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விழாவில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் பங்கேற்றார்.
September 15, 2025 9:53 PM IST

