Last Updated:
ஹைதராபாத் ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில் ரேணு அகர்வால் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷா, ரூஷன் மீது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தொழிலதிபரின் மனைவியை குக்கரால் தாக்கி, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் அமுதன் – இளமாறன் போன்ற சைக்கோ கொலை காரர்கள் ஒரு கொலையை கொடூரமாக அரங்கேற்றி விட்டு கொஞ்சமும் பதற்றமின்றி குளித்து உடை மாற்றி விட்டு லிப்டில் சாவகாசமாக இறங்கி தப்பிச் சென்றுள்ளனர் இந்த சைக்கோ கொலைகாரர்கள். ஒரே அபார்ட்மெண்டில் உள்ள இரு வீடுகளில் வேலைக்கு சேர்ந்து, நோட்டம் விட்டு, கொள்ளைக்கு திட்டம் தீட்டி கொடூரக் கொலையை அரங்கேற்றி குடியிருப்புவாசிகளை அலற விட்டிருக்கிறார்கள். யார் இந்த சைக்கோ கொலைகாரர்கள்.. வேட்டையாடு விளையாடு பாணியில் கொலையை அரங்கேற்றி தப்பிச் சென்ற நபர்கள் மற்றொரு கொலையை அரங்கேற்றுவதற்குள் போலீசாரிடம் சிக்குவார்களா?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 50 வயதான ரேணு அகர்வால். தனது கணவர் மற்றும் மகனுடன் சைபராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் வசித்து வந்தார். தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பரபரப்பான அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி செக்கிங். ஸ்கேனிங் என பாதுகாப்பு வளையத்திற்குள் அமைந்துள்ளது. ரேணுவின் கணவர் எக்கு வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் ஆவார்.
இவர்களுக்கு 26 வயதில் ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று தனது மகனை அழைத்துக் கொண்டு அகர்வால் வியாபாரம் விஷயமாக வெளியே சென்றுள்ளார். ரேணு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். புதன்கிழமை மாலை 5 மணிக்கு அகர்வால் தன்னுடைய மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் ரேணு அகர்வால் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
இதனைத்தொடர்ந்து நீண்ட நேரம் முயன்றும் மனைவியிடமிருந்து பதில் வராத காரணத்தால் பயந்துபோன அகர்வால், விரைவாக வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அகர்வால் ஒரு பிளம்பர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அதிர்ந்து போனார். ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அகர்வால் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷா என்பவர் தான தனது கூட்டாளியுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் போலீசாருக்குத் தெரியவந்தது. ஒரு மனித வள நிறுவனத்தின் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஹர்ஷாவும், அவரது நண்பர் ரூஷன் என்பவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பின் வெவ்வேறு வீடுகளில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
ஹர்ஷா 13வது தளத்தில் உள்ள ரேணு அகர்வால் வீட்டிலும், ரூஷன் 14வது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக அவர்கள் அந்த இரு வீடுகளிலும் நோட்டம் விட்டு வந்துள்ளனர். இவர்களது நோக்கமே கொள்ளையடித்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவது தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சம்பவத்தன்று, தனியாக இருந்த ரேணு அகர்வாலை வீட்டிலிருந்த குக்கர் மூடியால் பாமாகத் தாக்கியுள்ளார் ஹர்ஷா. மயங்கி விழுந்த ரேணுவின் கை, கால்களை கூட்டாளி ரூஷன் கட்டிப் போட்டுள்ளார்.
அப்போது வலியால் முணங்கிக் கொண்டிருந்த ரேணுவை வீட்டிலிருந்த கத்திரிக் கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் ஹர்ஷா. இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றி விட்டு வீட்டிலிருந்த 40 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். அதன்பின் சாவகாசமாக குளித்து உடை மாற்றி விட்டு, ரத்தக்கறை படிந்த ஆடைகளை அங்கேயே விட்டு விட்டு, கொள்ளையடித்த நகை பணத்துடன் லிப்டில் இறங்கி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு பேரையும் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஜார்கண்ட் விரைந்துள்ளனர். சினிமா பாணியில் கொடூரக் கொலையை அரங்கேற்றி விட்டு கொள்ளையடித்துச் சென்ற நபர்களால் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Hyderabad,Hyderabad,Telangana
September 12, 2025 4:10 PM IST
‘வேட்டையாடு விளையாடு’ பாணி சைக்கோ ஃபிரண்ட்ஸ்.. பெண் கொலைக்கு பின் கொலையாளிகள் செய்த அதிர்ச்சி செயல்!

