Last Updated:
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியின் கைகளில் எலிகள் ஆழமான காயங்களை ஏற்படுத்தியதால் அவரது எலும்புகள் தெரியும் அளவுக்கு காயங்கள் ஏற்பட்டன.
மும்பை மாநகராட்சியின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான வைல் பார்லேவில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் 85 வயது மூதாட்டியை எலிகள் கடித்து காயப்படுத்திய கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூதாட்டியின் கைகளில் எலிகள் ஆழமான காயங்களை ஏற்படுத்தியதால் அவரது எலும்புகள் தெரியும் அளவுக்கு காயங்கள் ஏற்பட்டன.
மரோலின் சிவாஜி நகரில் வசிக்கும் இந்துமதி சவான் (85) சனிக்கிழமை கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு இரத்த சப்ளை இல்லாததால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவர் இரண்டு நாட்கள் ஐசியுவில் வைக்கப்பட்டார். பின்னர் ஆறாவது மாடியில் உள்ள பெண்கள் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மார்பு தொற்று காரணமாக கடுமையான சுவாசப் பிரச்சனையுடன் சவான் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை காலை இந்துமதியின் பேரன் அவரைப் பார்க்க வந்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த காயத்தைப் பார்த்ததும் அவர் செவிலியர்களிடம் தெரிவித்தார். மருத்துவர் வந்ததும், அவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக இந்துமதியின் மருமகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து TOI செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்துமதியின் மருமகன் சந்தோஷ் ஜாதவ் கூறியதாவது, அவரது உடலில் ஆழமான கடி காயங்களை கண்டபோது தனது குடும்பம் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து, குடும்பம் புகார் அளித்ததாகவும், பின்னர் அதை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதே வார்டில் இருந்த மற்றொரு மூதாட்டியையும் அடுத்த நாள் எலி கடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துமதிக்கு நீரிழிவு நோய் உள்ளது, இந்நிலையில் எலிகள் அவரது தோலை எலும்பு வரை தின்று விட்டன. இந்த காயம் ஆறவில்லை என்றால், அவர் கடுமையான இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவரது குடும்பத்தினர் கவலையடைந்தனர். சவானின் உடம்பில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, சீற்றத்தைத் தூண்டியுள்ளன.
நோயாளிகளை எலி கடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, துப்புரவு ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், உடனடியாக பூச்சி கட்டுப்பாடு, எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடுமையான சுகாதாரத்தை பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Mumbai,Maharashtra
September 09, 2025 6:25 PM IST

