எனவே, மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த சின்ன உடைப்பு மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் வாழும் இம்மண்ணின் மூத்த வேளாண் தமிழ்க் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களின் ஒருமித்த கருத்தும், “மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பதாகும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரையை மையமாகக் கொண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்துள்ளேன்.
மேலும், மதுரை விமான நிலையத்திற்குப் பெயரிடுவது குறித்துப் பேச்சு எழும்போதெல்லாம், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, “பத்தரை மாற்றுத் தங்கம்” தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயரையே அனைத்துத் தரப்பினரும் முன்மொழிந்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்து பேசாமல், தேர்தல் நேரத்தில் பேச வேண்டியதை விடுத்து, குறுகிய எண்ணத்தோடு ஒருதலைப்பட்சமாக மதுரை விமான நிலையத்திற்குப் பெயர் சூட்டுவது குறித்துப் பேசியுள்ளார்.
