சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா… ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுடன் உரையாட போகிறது.
சுமார் 15 ஆண்டுகளாக புதியதாகவே மக்கள் பயன்பாடு இல்லாமல் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளது.
ஏன் இந்த நிலை? அடிப்படை வசதிகள் இல்லையா? அல்லது அதிகாரிகளின் பொறுப்பின்மையா? நேரில் கள ஆய்வு செய்தபோது குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் இருபாலருக்குமான கழிவறை வசதி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் கழிவறை என சுத்தமான பேருந்து நிலையம் மட்டுமல்ல… மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லாத பேருந்து நிலையமும்கூட… ஏன்?
சுமார் 34 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருக்கும் அறை என மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.
மொத்தமுள்ள 34 கடைகளில் வெறுமனே 5 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், அங்கு கடைகளை டெண்டர் எடுத்துள்ள கடைக்காரர்களைக் கேட்டபோது, ஆட்சியர், நகராட்சி ஆணையர் என அனைவரும் வந்து பார்த்தும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட தீவிரமான செயல்பாடுகள் இல்லை எனவும், தங்களிடம் `கோரிக்கை நிறைவேற்றி தருகிறோம்” என வெறும் பதில்கள் மட்டுமே அதிகாரிகள் மந்திரமாக உள்ளது என்றனர்.
