இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பெரும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எதிரானது.
இருந்தாலும், இது இந்தியர்களுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கப்படுவதற்கான காரணம்… ஆஸ்திரேலியர்களுக்கு அடுத்ததாக அந்த நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகை இந்தியாவினுடையது ஆகும்.
2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அங்கே கிட்டத்தட்ட 9.76 லட்சம் இந்தியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையே 2.6 கோடி தான்.
இந்தியர்கள் போக, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி இருக்கின்றனர்.

இது தான் ஆஸ்திரேலிய மக்களின் கோபத்திற்கு காரணம்.
“மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா’ என்று பெயரிட்டு நடத்திவரும் போராட்டம் குறித்து போராட்டக்காரர்கள் கூறுவதாவது…
“ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெளிநாட்டு மக்கள் உள்நாட்டில் செயலாற்றுகின்றனர். உள்நாட்டு மக்களைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அதனால், ஆஸ்திரேலியாவின் சொந்த மக்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும், தேசத்திற்காகவும், அதன் எதிர்காலத்தின் உரிமைக்காகவும் இந்தப் போராட்டம்” என்று தெரிவிக்கின்றனர்.
இந்தப் போராட்டம் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலெய்டு, பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
