நேற்றுமுதல் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், நேற்று இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி குறித்து குறிப்பிடப்பட்டதாவது:
“அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக உடனடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. நீண்டகால அடிப்படையில்தான் பாதிப்பு ஏற்படும்.
தற்போது நடைபெற்று வரும் இந்தியா–அமெரிக்கா பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.

எந்தெந்த நாடுகளுடன் ஒப்பந்தம்?
இந்தியா சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, சிலி, பெரு ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிய இன்னும் காலம் ஆகும். ஒருவேளை அமெரிக்காவின் 50 சதவீத வரி தொடர்ந்தால், இந்த ஒப்பந்தங்கள் இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தை முழுமையாக ஈடுசெய்யாமல் போகும் வாய்ப்பும் உள்ளது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
