சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலுக்கட்டாயமாக கைதுசெய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இத்தகைய செயலுக்கு தி.மு.க அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் வந்தது.
மறுபக்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியளித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் 13 நாள்கள் போராட்டத்தின்போதும் மௌனம் காத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்ட அடுத்தநாள் அமைச்சரவையைக் கூட்டினார்.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாக இல்லாமல், சட்டமன்றத் தேர்தலுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை இடம்பெறவில்லை.

இவ்வாறிருக்க, வாக்குறுதி கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறிவந்த விசிக தலைவர் திருமாவளவன், “பணி நிரந்தரம் செய்யுங்கள் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.
பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூக நீதி” என்று தற்போது கூறியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
