இந்நிலையில் உத்தவ் தாக்கரேயின் வலதுகரமாக செயல்படும் சஞ்சய் ராவுத் எம்.பி இது குறித்து அளித்த பேட்டியில்,”‘ வரும் மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் மும்பை, தானே, நாசிக், கல்யான்-டோம்பிவலியில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் பலம் மராத்தி மொழி பேசுபவர்களின் ஒற்றுமையின் பலம் ஆகும். மராத்தியர்களின் இரும்பு கரத்தை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது” என்று ராவுத் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்,”ஜனநாயகத்தில் யாரும் பிரியலாம் அல்லது ஒன்று சேரலாம். அவர்கள் முதலில் மும்பை, தானே, நாசிக்கில் வெற்றி பெறவேண்டும். அதன் பிறகு அவர்கள் மேற்கொண்டு பேசட்டும்”என்றார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் பரத் கோகாவாலா இது குறித்து கூறுகையில்,” ஆளும் மகாயுதி கூட்டணி அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாக்கரே சகோதரர்கள் முதல் முறையாக ஒன்று சேர இருக்கும் நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே இடம் பெற்று இருக்கிறார். உத்தவ் தாக்கரே தனது சகோதரர் ராஜ் தாக்கரேயுடன் கைகோர்க்க முடிவு செய்து இருப்பதை காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் எந்தமாதிரி எடுத்துக்கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.
ராஜ் தாக்கரேயும் மகாவிகாஸ் அகாடியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மும்பை, தானே, நாசிக் போன்ற பகுதியில் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த அதிகமான தலைவர்கள் எதிரணிக்கு சென்றுவிட்டனர்.

