Last Updated:
லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக வெடிக்க கடும் கோபமடைந்த பயணி WWF ராக்காக அவதாரம் எடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன?
ஸ்ரீநகர் விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மீது ராணுவ அதிகாரி ஒருவர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, ஜூலை 26ம் தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வழக்கமான விமானப் போக்குவரத்து நடைமுறை படி, பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, டெல்லி செல்லும் SG-386 விமானத்தின் ஏறும் வாயிலில், மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை நிறுத்திய விமான நிலைய ஊழியர்கள் உங்களது லக்கேஜ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவ அதிகாரி விமானநிலைய ஊழியர்களுடன் கடும் தகராறில் ஈடுபட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய அவர், திடீரென விமான நிலைய ஊழியர்கள் சரமாரியாக பாய்ந்து பாய்ந்து தாக்க ஆரம்பித்தார்.
கையில் கிடைத்த அறிவிப்பு பலுகையை எடுத்துக் கொண்டு பாய்ந்தவர் சிக்கிய ஊழியரை தலையிலேயே அடித்தார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். அவரது தாக்குதலில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கடுமையாக கண்டித்து உள்ளது. தாக்குதல் நடத்தியவர் மொத்தம் 16 கிலோ எடையுள்ள இரண்டு கேபின் பைகளை எடுத்துச் சென்றுள்ளார். இது அனுமதி வழங்கப்பட்டுள்ள எடையை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊழியர்கள் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும் என்பதால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
August 04, 2025 10:24 AM IST


