ஆந்திர பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே வந்து தரும்படியிலான திட்டம் தொடங்கப்படவுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
“மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 12.8.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,197 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
