Last Updated:
1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கிய செய்தி வைரல்.
இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள நிலையில், 1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கிய பழைய செய்தித்தாள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
பரஸ்பர வரி விதிப்பு முறையில் இந்தியாவிற்கு 26 சதவீத இறக்குமதி வரியை அறிவித்த டிரம்ப், அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு ஒரு சதவீதம் குறைத்து 25 சதவீதமாக நிர்ணயம் செய்தார். அதன்படி, இந்தியாவிற்கான 25 சதவீத இறக்குமதி வரி நடவடிக்கை வரும் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்களையும், கச்சா எண்ணெய்யையும் வாங்கினால் ஏற்கெனவே உள்ள வரியுடன் கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து டிரம்ப் மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவதோடு மட்டுமல்லாது, அதில் பெரும் பகுதியை சந்தையில் விற்று, அதிக லாபமும் பார்ப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை எனவும், இந்த காரணத்திற்காக இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையே வரிவிதிப்பு தொடர்பான பரபரப்பு சூழல் நிலவிவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் எக்ஸ் பக்கத்தில் 1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, அமெரிக்கா அதிகளவு ஆயுதங்களை வழங்கிய செய்தி அடங்கிய செய்தித்தாளை பதிவு செய்துள்ளது.
இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “அந்த வருடத்தின் இந்த நாள்” போரின் உருவாக்கம் – 05 ஆகஸ்ட் 1971. 54ல் இருந்து பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது” எனத் தெரிவித்து அந்த செய்தித்தாள் பகிரப்பட்டுள்ளது.
August 05, 2025 2:43 PM IST
அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி அச்சுறுத்தல்; பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கி உதவிய அமெரிக்கா! இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவு

