Last Updated:
போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில் என்பதைக் கண்டுபிடித்தனர். போலீஸார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
கேரளாவில், ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷ்மா பாணியில் அதிர வைத்த இளம் பெண் திட்டம் போட்டு காதலனை தீர்த்துக் கட்டியது எப்படி?
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான அதீனா. இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கூறியிருக்கிறார். போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில் என்பதைக் கண்டுபிடித்தனர்.
போலீஸார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அன்ஸில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் சமயத்தில் தனக்கு அதீனா ஜூஸில் விஷம் கலந்து குடிக்கக் கொடுத்ததாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் அன்ஸில். இதுகுறித்து மருத்துவமனையில் வைத்து டாக்டரிடமும் அன்ஸில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அதினாவை கைதுசெய்து, அவரது வீட்டில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அதில் அதீனா கொடுத்த ஜூஸில் பூச்சிமருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. உயிரிழந்த அன்ஸில் ஜே.சி.பி, டிப்பர் லாரி போன்ற கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்தார். அவருக்கும் ஸப்னா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில்தான் அன்ஸிலுக்கும், அதீனாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நெருக்கமாக பழகி வந்த இவர்களுக்குள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையே நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து வந்த நிலையில், அன்ஸில் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதீனா. அந்த வழக்கு 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வைத்து சமரசமாக முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அன்ஸிலை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் அதீனா.
திட்டமிட்டபடி ஜூஸில் பூச்சிக் கொல்லி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் துடிதுடித்த அன்ஸில் மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உடலை வீட்டுக்கு அருகே போட்டு விட்டு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுப்பது போல் நாடகம் ஆடியிருக்கிறார் அதீனா. ஆனால், வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது அதீனா மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோர்ட்டில் சமரசமாக முடித்துவைக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கூறியபடி, தனக்கு தரவேண்டிய பணத்தை அன்ஸில் தராததால் கொலைசெய்ததாக அதீனா கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து காதலனை கொலைசெய்த கிரீஷ்மா போன்று, ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து அதீனா கொலைசெய்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 04, 2025 7:42 AM IST
