Last Updated:
“இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. இந்தியப் பிரதமர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்” என ராகுல் காந்தி பேசினார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு இல்லை என்பதை முழு நாட்டிற்கும் காட்டும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்” என பேசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்றுவரும் வருடாந்திர சட்ட மாநாட்டில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “2014ஆம் ஆண்டு முதலே ஏதோ தவறாக இருப்பதாக நான் சந்தேகித்தேன். ஏற்கனவே குஜராத் சட்டமன்றத் தேர்தல் குறித்தே சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நாங்கள் இது குறித்து பேசும்போது, ஆதாரம் எங்கே என மக்கள் கேட்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றோம். ஆனால், நான்கு மாதங்கள் கழித்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அல்ல களத்தில் இருந்தே தூக்கி எறியப்பட்டோம். மூன்று வலிமையான கட்சிகளும் திடீரென காணாமல் போய்விட்டன.
இதன் பிறகு தேர்தல் முறைகேடுகளை தீவிரமாக பார்க்கத் துவங்கினோம். அப்போதுதான் மகாராஷ்டிராவில் அதனை கண்டுபிடித்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே புதிதாக ஒரு கோடி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குகள் பெரும் அளவில் பாஜகவுக்கு சென்றிருக்கின்றன. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்பதை தற்போது சந்தேகமின்றி கூறுகிறேன்.
தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு இல்லை என்பதை முழு நாட்டிற்கும் காட்டும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது மறைந்துவிட்டது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். துளிகூட சந்தேகம் இல்லாமல், மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்பட்டது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோசடி நடந்தது என்பதை விரைவில் உங்களுக்கு நிரூபிக்க இருக்கிறோம்.
#WATCH | Delhi: At the Annual Legal Conclave- 2025, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “I remember when I was fighting the farm laws, Arun Jaitley ji was sent to me to threaten me. He told me “if you carry on opposing the govt, fighting the farm laws, we will have… pic.twitter.com/8RJWmHo9fE
— ANI (@ANI) August 2, 2025
உண்மையில், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. இந்தியப் பிரதமர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்” என பேசினார்.
தொடர்ந்து சட்ட மாநாட்டில் பேசிய அவர், “நான் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடியபோது, ”அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், நாங்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வேண்டி வரும்” என அருண் ஜெட்லி எனக்கு மிரட்டல் விடுத்தார். அப்போது நான் அவரிடம், “நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்” என அவருக்கு பதில் அளித்தேன்” என பேசியுள்ளார்.
August 02, 2025 12:15 PM IST

