வர்த்தகமல்லாத தடைச் சுவர்கள்
வர்த்தகமல்லாத தடைகள் விஷயத்தைப் பொறுத்தவரை, இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து செய்யப்படும் இறக்குமதியில் அளவு உச்சவரம்பை விதிப்பது ( பருப்பு , பீன்ஸ் போன்ற விவசாய விளைபொருட்கள் மீது), பால் பொருட்கள் மீது மதக் காரணங்கள் காட்டி அவைகள் விலங்குப் பொருட்களை தீவனமாகத் தரப்பட்ட கால்நடைகளிடமிருந்து பெறப்பட்டவை அல்ல என்று உத்தரவாதம் கேட்பது, அமெரிக்க சமூக ஊடக கம்பெனிகள் மற்றும் டிஜிடல் கம்பெனிகளை அரசியல் காரணங்களுக்காக, அந்த தளங்களில் பிரசுரித்த பதிவுகளை எடுக்கச் சொல்வது, மேலும் அந்தப் பதிவுகளுக்காக, அந்த நிறுவன ஊழியர்களை கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள வைப்பது போன்றவைகளை அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது.

ரஷ்யா எண்ணெய்ப் பிரச்சனை
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கிய விவகாரத்திலும் இந்தியா பெரிய அளவில் விட்டுக்கொடுக்கும் என்று தோன்றவில்லை.
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போரின் நியாய, தர்மங்கள் குறித்து மேற்குலகுக்கும், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்தப் போரை அடுத்து அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை சந்தித்த ரஷ்யா, தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை மேற்குலகிற்கு விற்க முடியாமல்போன நிலையில், அதை குறைந்த விலைக்கு இந்தியா , சீனா போன்ற நாடுகளுக்கு விற்றது.
இதை சந்தர்ப்பவாத வர்த்தகம் என்று சொல்லலாம், ஆனால் எண்ணெய் இறக்குமதி செய்தே உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய இந்தியா , சீனா போன்ற நாடுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை அவை வாங்கிக் கொண்டன.
எனவே இந்த விஷயங்களில் இந்தியா இது வரை இதில் விட்டுக்கொடுக்கும் எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
இந்த புதிய வரிவிகிதங்கள் இப்படியே நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு ஏற்படும்.
அமெரிக்க வர்த்தகக் குழு ஒன்று இந்தியாவுக்கு இந்த மாதம் வர இருக்கும் சூழலில், இந்த வரி விகிதப் பிரச்சனை மீண்டும் விவாதிக்கப்பட்டு இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது.!
