மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான “மகாதேவி (மதுரி)’, அம்பானியின் ‘வந்தாரா’ உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது.
1992ம் ஆண்டு முதல் அந்த மடத்தில் வளர்க்கப்பட்டு, ஊர்வலம், கோவில் விழாக்களில் பங்கேற்பது என மகாதேவி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விலங்கு உரிமைகள் அமைப்பான ‘PETA’ அதிகமான சுமை, ஊர்வலங்களில் மூன்று நான்கு பேர் ஏறிக்கொண்டு போவது, பிச்சை எடுக்க வைப்பது என மாகதேவி யானையை துன்புறுத்துவதாகவும், அதன் கால்கள் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. மேலும், துன்புறுத்தலுக்கும், பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும் மகாதேவி யானையை மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.

‘PETA’ போட்ட இந்த வழக்கு பல மாதங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே ‘மகாதேவி யானையை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து ஆனந்த் அம்பானி நடத்தி வரும் ‘வந்தாரா’ உயிரியல் பூங்காவிற்கு மகாதேவி யானை மாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது மகாராஷ்டிரா ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயின் சமூகத்தினர், ‘யானையை துன்புறுத்தவில்லை. அது எங்கள் கோவிலில் அன்புடன் வளர்க்கப்பட்ட கோவில் யானை. அதை மீட்டெடுக்க வேண்டும்’ என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
