Last Updated:
பருவநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நிதி விவகாரங்கள், நிர்வாகம், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்படுகிறது
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மாநாட்டின் போது பகல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து இந்தியா தரப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் போது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார்.
இதற்கான அழைப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ பிரதமர் மோடிக்கு வழங்கி இருக்கிறார். தற்போது நடைபெற உள்ளது 17-வது உச்சி மாநாடு ஆகும். மேலும் நான்காவது முறையாக பிரதமர் மோடி பிரேசிலுக்கு செல்ல உள்ளார்.
பருவநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நிதி விவகாரங்கள், நிர்வாகம், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்படுகிறது. மேலும் இந்தியா தரப்பில் தீவிரவாத தாக்குதல் குறித்தும் அதன் பாகிஸ்தானுடைய பின்னணி குறித்தும் இந்தியா தரப்பில் பேசப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
June 30, 2025 6:20 PM IST

