Last Updated:
விமானத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி கடந்த சில நாட்களாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டு இறுதி கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வரும் முன்னிலையில் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணத்தை அறிய, கருப்புப் பெட்டியை தேடும் பணியை விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது.
விமானம் விழுந்த மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து ஒரு கருப்புப் பெட்டியும், இடிபாடுகளிலிருந்து மற்றொரு கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கருப்புப் பெட்டியில் இருக்கும் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.
வெற்றிகரமாக மீட்கப்பட்டு விசாரணை ஆணையத்தில் தரவுகள் வெற்றிகரமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டதுடன் தரவுகள் குறித்து பகுப்பாய்வும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான விபத்துக்கு சாப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை நிபுணர் மேரி ஷியாவோ கூறியதாவது-
சாப்ட்வேர் பிரச்சினை காரணமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதுகிறேன். சாஃப்ட்வேர் பிரச்சினையால் விமானம் மேலே போதிய அளவு உயர்ந்து பறப்பதற்கான உந்து சக்தி கிடைக்காமல் போய் இருக்கலாம். அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
விபத்துக்குள்ளான போயிங் ரக விமானங்களில் சாப்ட்வேர் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம். விமானத்தின் இயக்கம் அனைத்தும் மென்பொருளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. விமானம் தரையில் இருப்பதாக உணரப்படும் போது பைலட்டின் தலையீடு இல்லாமல் ஆட்டோமேட்டிக்காக விமானம் மேலே எழும்புவது குறைந்திருக்கலாம். இவ்வாறு நடந்ததன் காரணமாக விமானம் நடுவானிலிருந்து கீழே விழுந்து இருக்கலாம் என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
July 01, 2025 1:06 PM IST

