Last Updated:
தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் 42% இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு 42% இட ஒதுக்கீட்டை அம்மாநில அமைச்சரவை விரைவில் அமல்படுத்த உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கான 42 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெலங்கானா அமைச்சர்கள் பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் பொன்னம் பிரபாகர் ஆகியோர் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர்.
தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இன்னும் 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக அரசின் தலைமை வழக்கறிஞருடன் அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறினர்.
July 11, 2025 1:00 PM IST
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு 42% இட ஒதுக்கீடு – தெலங்கானா அரசு எடுத்த அதிரடி முடிவு

