பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த பன்னாவின் மிகவும் வயதான மற்றும் மிகவும் பிரியத்திற்குரிய வத்சலா யானை உயிரிழந்து விட்டதாக மூத்த வன அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். வன ஊழியர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்களால் ‘Dadi’ மற்றும் ‘Dai Maa’ என்று அன்பாக அழைக்கப்பட்டு வந்த வத்சலா, 100 வயதுக்கு மேலான பெண் யானையாகும் மற்றும் நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்தது.
அதேபோல பல ஆண்டுகளாக பன்னா காடுகளின் அடையாளமாக இந்த யானை இருந்து வந்தது. சமீபத்திய நாட்களில், வத்சலாவின் முன் கால் நகங்கள் காயமடைந்தன. நேற்று ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் அருகே அமர்ந்திருந்த வத்சலாவால் எழுந்திருக்க முடியவில்லை. வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வத்சலாவை எழுப்ப பல வழிகளிலும் முயன்றதாகவும், ஆனால் பிற்பகல் 1:30 மணியளவில் அதன் மூச்சு முற்றிலும் நின்று போய்விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971-ஆம் ஆண்டு கேரளாவின் காட்டிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு வத்சலா யானை அழைத்து வரப்பட்டது. முதலில் அது நர்மதாபுரத்தில் வைக்கப்பட்டு பின்னர் பன்னா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டது, இங்கு அது தனது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை இருந்தது. அதற்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து கஞ்சி போன்ற மென்மையான உணவு வழங்கப்பட்டது. வயதானதால், அதன் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டது. மேலும், நீண்ட தூரம் அதனால் நடக்க முடியாத சூழலில் இருந்தது. வத்சலா யானை உடல்நிலை நன்றாக இருந்த வரை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான யானைக் குழுவிற்கு தலைமை தாங்கியது.
பல ஆண்டுகளாக பன்னா புலிகள் காப்பகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய விலங்குகளில் ஒன்றாக வத்சலா இருந்தது. யானைக் குழுவின் தலைவராக இருந்த வத்சலா, மற்ற பெண் யானைகளின் கன்றுகளையும் அன்பாக கவனித்துக் கொண்டார். பல யானைக் குட்டிகள் அன்பாக வளர்வதைக் கண்டது. தான் வசித்த இடத்தில் இருந்த யானைக் கூட்டத்தில் பிறந்த புதிய யானைக் குட்டிகளின் பிறப்புக்கும் பல வகைகளில் உதவியுள்ளது. வத்சலா யானை 100 வயதைத் தாண்டி வாழ்ந்துள்ளது, இது பொதுவாக யானைகளின் ஆயுட்காலமான 60-70 ஆண்டுகளைவிட அதிகம்.
இந்த யானை இறந்ததும் PTR-ன் கள இயக்குநர் அஞ்சனா சுசிதா திர்கி, துணை இயக்குநர் மோஹித் சூட் மற்றும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் சஞ்சீவ் குப்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் முகாமில் மரியாதையுடன் வத்சலாவின் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. கேரளாவின் நிலம்பூர் காடுகளில் பிறந்த வத்சலா, மர வியாபாரத்தில் பணிபுரியும் யானையாக தனது பயணத்தைத் தொடங்கியது.
பன்னா காப்பகத்தில் விலங்குகளிடையே அரிதாகவே காணப்படும் அரவணைப்பையும், தோழமையையும் பிற யானைகளுக்கு வழங்கியது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் வத்சலாவின் இறுதிச் சடங்குகளை உரிய மரியாதையுடன் செய்தனர். பன்னாவின் வறண்ட வனப் பகுதியில் சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான சூழலின் விளைவாகவே வத்சலா நீண்ட ஆயுள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
வத்சலாவின் மறைவுக்கு மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “வத்சலாவின் நூறு ஆண்டுகாலத் தொடர்பு இன்று முடிவுக்கு வந்தது. அவள் வெறும் யானை மட்டுமல்ல, நம் காடுகளின் அமைதியான பாதுகாவலராகவும், தலைமுறைகளின் தோழியாகவும், மத்தியப் பிரதேசத்தின் உணர்வுகளின் சின்னமாகவும் இருந்தார். வத்சலாவின் கண்களில் அனுபவங்களின் பெருங்கடல் இருந்தது, அவர் யானைக் குழுவை அவள் வழிநடத்தி, குட்டிகளை அன்பாகப் பராமரித்தார். இன்று அவள் நம்மிடையே இல்லை, ஆனால் அவளுடைய நினைவுகள் எப்போதும் நம் மண்ணிலும், மனதிலும் உயிருடன் இருக்கும். ‘வத்சலாவுக்கு’ பணிவான அஞ்சலி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
July 10, 2025 1:17 PM IST
பன்னா புலிகள் காப்பகத்தில் இறுதி மூச்சைவிட்ட வத்சலா யானை… ஆசியாவின் மிகவும் வயதான யானை இதுதான்…!
