மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மும்பையில் உள்ள எம்எல்ஏக்களுக்கான விடுதியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பலர் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், பல்தானா தொகுதி எம்எல்ஏவுமான சஞ்சய் கெய்க்வாட் தங்கியுள்ளார்.
இவர், எம்எல்ஏ விடுதியில் உள்ள கேண்டீனில் இருந்து இரவு உணவு வாங்கியுள்ளார். சப்பாத்தி, சாதத்துக்கு பருப்பு குழம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குழம்பை ஊற்றி சப்பாத்தி சாப்பிட்டபோது அது கெட்டுப் போன வாடை வந்துள்ளது. மேலும், அதை சாப்பிட்டபோது வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ இடுப்பில் கட்டியிருந்த துண்டு மற்றும் பனியனுடன், கெட்டுப் போன குழம்பு பாக்கெட்டை கையில் பிடித்துக் கொண்டு நேராக கேண்டீனுக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும், இந்த குழம்பை தயார் செய்தது யார்?, மேனேஜரை எங்கே? என்று கேட்டு சஞ்சய் கெய்க்வாட் கத்தியுள்ளார். சத்தத்தை கேட்டு ஆடிப்போன கேண்டீன் ஊழியர் யோகோஷ் குத்ரன் என்பவர் ஓடி வந்துள்ளார்.
என்ன ஆச்சு சார் என்று அவர் கேட்டதும், குழம்பை முகர்ந்து பார் என்று எம்எல்ஏ கூறியுள்ளார். ஊழியர் குழம்பை முகர்ந்து பார்த்த அடுத்த நோடியே, அவரின் கன்னத்தில் எம்எல்ஏ பளார் பளார் என இரண்டு முறை அறைந்துள்ளார். சுதாரிப்பதற்குள் தான் ஒரு குத்துச்சண்டை வீரர் என்ற நினைப்பில், கேண்டீன் ஊழியர் முகத்தில் ஓங்கி பலமாக குத்தியுள்ளார். அதில், நிலைகுலைந்து கீழே விழுந்த ஊழியர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், அவரை எம்எல்ஏ தாக்கி எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார். அதில், கேண்டீனில் கெட்டுப்போன உணவை கொடுப்பது இது முதல்முறை அல்ல என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இருமுறை இதேபோன்று நிகழ்ந்துள்ளதாகவும், புகார் அளித்தும் ஊழியர்கள் அதை சரி செய்யவில்லை எனவும் சாடியுள்ளார்.
இது தொடர் கதையானதால் ஊழியரை தாக்கியதாகவும், இனியும் தரமற்ற உணவு வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை அடிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். இது தான் சிவசேனா மாடல் என்றும் இறுமாப்புடன் கூறியுள்ளார். மேலும், தான் காந்தியவாதி அல்ல என்று கூறிய சஞ்சய் கெய்க்வாட், தான் ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, மல்யுத்த சாம்பியன் எனவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான கேண்டீன் ஊழியர் போலீசில் புகார் ஏதும் அளிக்காத நிலையில், எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் தருவேன் எனக் கூறி சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையில் சிக்கினார். தற்போது மீண்டும் தனது அடாவடி நடவடிக்கையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தை சட்டப் பேரவையில் எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
July 09, 2025 3:09 PM IST
எம்எல்ஏக்கள் விடுதியில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவு.. கடுப்பில் சிவசேனா எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்!
