மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து, இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான். நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.
இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில், இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
“உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?” என்றும், “இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன – இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற பாஜக அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி – சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை பாஜக அரசு மாற்றிக் கொள்ளுமா?