சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “ஐயா ஐயாவாக இல்லை குழந்தை போல் மாறிவிட்டார். மூன்று தீய சக்திகள் அவரை ஆட்டி வைக்கிறார்கள் எனவும், கொலைகாரன், கொள்ளைக்காரன், எலந்த பழம் விற்பவனுக்கு எல்லாம் பதவிகளை வழங்கி வருகிறார்” என ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த நிலையில் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் இணை பொதுச்செயலாளர் அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “ராமதாசை, அன்புமணி விமர்சிப்பது வேதனையாக உள்ளது.
ராமதாசுடன் இருப்பவர்களை இணையத்தில் விமர்சிக்க ஒரு கும்பலே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி நல்ல தலைவர்தான். ஆனால் அவரை தீய சக்திகள் தவறான பாதையில் வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை குழந்தையாக மாறிவிட்டார் என்று அன்புமணி சொல்கிறாரே இந்த குழந்தைதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது அப்படியானால் அந்த குழந்தை உங்களை தலைவராக்கியது மட்டும் எப்படி செல்லும் என கேள்வி எழுப்பினார்.